புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பிலிப் பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 81 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். குடியரசு தின விளை யாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, தனது மகள் உள்பட 15 மாணவிகளை மாநில அளவிலான கால்பந்துப் போட்டிக்கு, ஆசிரியர் தயார் செய்தனர். சபா சகேயூன் இப்ராகிம், பட்டதாரி ஆசிரியை திலகவதி ஆகியோர், திருச்சி மாவட்டம், கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் உள்ள விளையாட்டுத் திடலில் நடந்த போட்டியில் கலந்துகொள்ள அழைத்துச் சென்றுள்ளனர்.
புதன்கிழமை ஊருக்குத் திரும்பியபோது, கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கட்டு அருகே உள்ள செல்லியம்மன் கோயிலில் தரிசனம் செய்ததோடு, அங்குள்ள காவிரி ஆற்றில் விளையாட்டு உடைகளுடனேயே இறங்கிய போது, ஒரு மாணவியை தண்ணீர் இழுத்துள்ளது. அந்த மாணவியைக் காப்பாற்ற முயன்ற மாணவிகளையும் தண்ணீர் இழுத்துச் சென்றதில், சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் உயிரிழந்தனர். கரையில் நின்ற மற்றவர்களால் காப்பாற்ற முடியாத நிலையில், தீயணைப்பு வீரர்கள் வந்து 4 மாணவிகளையும் சடலமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். "எங்கள் குழந்தைகள் விளையாட்டில் வெற்றிபெற்று வந்ததும் வெற்றிவிழா கொண்டாட ணும்னு சொல்லிட்டுப் போனாங் களே... இப்ப வெற்றி மாலைக்கு பதிலா வேற மாலை போடுற மாதிரி ஆகிடுச்சே'' என்று மொத்த கிராமமும் சோகத்தில் துடிக் கிறது!
ஆற்றில் மூழ்கிப் பலியான மாணவிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார். அமைச்சர் ரகுபதி, ஜோதிமணி எம்.பி., மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் மாணவிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, முதல்வர் அறிவித்த நிவா ரணத்தை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, "இந்தத் துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உறவினர்கள் இல்லாமல் பிரேதப் பரிசோதனை செய்தது குறித்தும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசகர்களைக் கொண்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காதவாறு எச்சரிக்கையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இந்தநிலையில், பள்ளித் தலைமை ஆசிரியை பொட்டுமணி, மாணவிகளை அழைத்துச்சென்ற 2 ஆசிரியர்கள் என 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அபாயமான பகுதி என எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ள ஆபத்தான பகுதிக்கு 14 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளான மாணவிகளை அழைத்துச் சென்ற இடைநிலை ஆசிரியரும் பயிற்சியாளருமான சபாசகேயூன் இப்ராகிமை மாயனூர் போலீசார் கைது செய்தனர்.